search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் தண்டவாளம்"

    • ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார்.
    • அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

    குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது. ரெயிலை பார்த்ததும் தண்டவாளத்தில் இருந்து காரை கீழே இறக்க அவர் முயன்றுள்ளார். ஆனால் கார் தண்டவாளத்தில் சிக்கியது.

    தண்டவாளத்தில் கார் இருப்பதை பார்த்த ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    அப்போது சிலர் காரை தண்டவாளத்தை விட்டு வெளியே எடுக்க உதவி செய்தார்கள். கார் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்ததும் அந்த நபர் காரை வேகமாக ஓட்டி போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

    இதையடுத்து போலீசார் அந்த காரை துரத்திச் சென்று பிடித்து அவரை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.

    ரயில் தண்டவாளத்தில் மக்கள் ரீல்ஸ் எடுப்பது ஒன்றும் இது முதல் முறை அல்ல. இம்மாதிரி ரீல்ஸ் எடுக்கும்போது பலரும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தியுள்ளார்.
    • முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஜெய்ப்பூரில் இருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பின்னர் இந்த ரெயில் திருப்பூரில் இருந்து புறப்பட்டது. அப்போது, திருப்பூர் கல்லம்பாளையம் அருகே ரெயில் சென்றபோது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ரெயில் அருகில் வருவதைப் பார்த்து உடனடியாக தண்டவாளத்தில் படுத்தார்.

    இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தியுள்ளார். இருப்பினும், ரெயில் என்ஜின் அந்த முதியவரைத்தாண்டி சென்று நின்றது. அந்த முதியவர் ரெயில் என்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

    பின்னர், உடனடியாக தண்டவாளத்தில் இறங்கி வந்து பார்த்த என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை பின்னோக்கி இயக்கி அந்த முதியவரை மீட்டனர். இதில் அந்த முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் அவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த பாலையா (வயது 67) என்பது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் வந்ததால் அவர் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பி உள்ளார். உடனடியாக ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இந்த சம்பவத்தால் ரெயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • செங்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது அதிக லோடு காரணமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
    • தண்டவாளத்தில் நொறுங்கி கிடந்த லாரியை துரிதமாக செயல்பட்டு 3 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக முழுவதுமாக அப்புறப்படுத்தினர்.

    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மைலப்புரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 43). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு லாரியில் மணிகண்டன் புறப்பட்டார். கிளீனராக சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணியை சேர்ந்த பெருமாள்(28) என்பவர் லாரியில் உடன் வந்தார். இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் தமிழக-கேரளா எல்லை பகுதியான செங்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது அதிக லோடு காரணமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சாலையோர பள்ளத்தில் இருக்கும் ரெயில்வே தண்டவாளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தின்போது கிளீனர் பெருமாள் லாரியில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். அதே நேரத்தில் விபத்தில் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தை பார்த்து அப்பகுதியில் வசிக்கும் முதிய தம்பதியான சண்முகையா(66)-வடக்கத்தி அம்மாள்(60) ஆகியோர் அங்கே விரைந்து வந்தனர். மேலும் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் சுப்பிரமணியன் என்பவரும் அங்கு வந்தார். இதற்கிடையே திருவனந்தபுரம் பகவதியம்மன் கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு புனலூர் நோக்கி செங்கோட்டையில் இருந்து சிறப்பு ரெயில் ஒன்று நள்ளிரவு 12.50 மணியளவில் புறப்பட்டு சென்றது.

    அந்த ரெயில் லாரி விபத்து நடந்த பகுதி வழியாக வந்து கொண்டிருந்தது. இதனை அறிந்த முதிய தம்பதி, உடனடியாக லாரி விபத்து நடந்த இடத்திற்கு சற்று முன்பாக ஓடிச்சென்று சிவப்புநிற துணியை டார்ச் லைட்டில் சுற்றி ரெயிலை நோக்கி ஒளிரச்செய்தனர். இதையடுத்து ரெயில் டிரைவர் என்ஜினை நிறுத்தினார். இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து இருப்புபாதை பராமரிப்பு பொறியாளர் ஞானசுந்தரம், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கற்பக விநாயகம், மாரிமுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், தலைமை காவலர்கள் நாகராஜ், மாரிதுரை ஆகியோர் விரைந்து வந்தனர். லாரியின் இடிபாட்டுக்குள் சிக்கியிருந்த மணிகண்டனின் உடலை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் தண்டவாளத்தில் நொறுங்கி கிடந்த லாரியை துரிதமாக செயல்பட்டு 3 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக முழுவதுமாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் வழக்கம்போல் அந்த வழித்தடத்தில் ரெயில்கள் புறப்பட்டு சென்றன. பெரும் விபத்தை தவிர்க்க சாமர்த்தியமாக செயல்பட்ட முதிய தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர். 

    • ரெயிலின் சத்தம் வித்தியாசமாக தென்படவே உடனடியாக ரெயிலை நிறுத்தி இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
    • இந்த வழித்தடத்தில் இன்று மாலையில்தான் அடுத்தடுத்து 3 ரெயில்கள் இயக்கப்படும்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம், பழனி வழியாக பாலக்காடு வரை தினந்தோறும் 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே வழித்தடத்தில் மதுரையில் இருந்து கோவை செல்லும் ரெயிலும், திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து பழனி செல்லும் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒட்டன்சத்திரம், பழனி வழியாக செல்கிறது.

    இன்று காலை பாலக்காட்டில் இருந்து 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திண்டுக்கல் நோக்கி ரெயில் வந்து கொண்டிருந்தது. பழனி ரெயில் நிலையத்தை கடந்து ஒட்டன்சத்திரம் நோக்கி காமாட்சிபுரம் பகுதியில் வந்தபோது தண்டவாளத்தில் உடைப்பு இருந்தது என்ஜின் டிரைவருக்கு தெரியவந்தது.

    ரெயிலின் சத்தம் வித்தியாசமாக தென்படவே உடனடியாக ரெயிலை நிறுத்தி இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்தனர். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு ரெயிலை மெதுவாக இயக்குமாறு டிரைவர்களுக்கு அறிவுறுத்தினர். அதன்படி உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மெதுவாக ரெயிலை இயக்கி அந்த இடத்தில் இருந்து கடந்து சென்றது.

    தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு டிரைவரின் சாமர்த்தியத்தால் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 500 பயணிகள் உயிர் தப்பினர்.

    இந்த வழித்தடத்தில் இன்று மாலையில்தான் அடுத்தடுத்து 3 ரெயில்கள் இயக்கப்படும். எனவே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவத்தால் ஒட்டன்சத்திரம் ரெயில்வே பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுபோதையில் ஓட்டிவந்த டிரைவர் திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்தினார்.
    • மக்கள் கொடுத்த சிக்னலால் ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்தார்.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் ஒருவர், திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்திவிட்டுச் சென்றார். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே அந்த வழியாக வந்த ரெயிலுக்கு சிக்னல் கொடுத்தனர்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட டிரைவர் ரெயிலின் வேகத்தைக் குறைத்து சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்தார். தொடர்ந்து, தண்டவாளத்தில் இருந்து லாரி அப்புறப்படுத்தப்பட்ட பின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். விசாரணையில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அதன்பின் டிரைவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுபோதையில் தண்டவாளத்தில் லாரியை நிறுத்திய டிரைவரால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • ரயில் தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.
    • இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே சமயநல்லூர்-சோழ வந்தான் இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. வெள்ளை கலர் சேலை, ஆரஞ்சு கலர் பாவாடை, சந்தன கலர் ஜாக்கெட் அணிந்திருந்த அந்த மூதாட்டி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

    இது தொடர்பாக தேனூர் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அந்தப்பெண் நேற்று காலை சமயநல்லூர்-சோழவந்தான் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்று இருக்கலாம். அப்போது அந்த வழியாக சென்ற ெரயிலில் அடிபட்டு, அல்லது மதுரை- திண்டுக்கல் ெரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தோ இறந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மூதாட்டி பற்றிய அடையாளம் தெரிந்தால் 0452- 2343851, 94981 01988 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மதுரை ெரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • மதுரை அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • விருதுநகர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குண்டாறு பாலம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று இரவு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலை வைத்து ப‌டுத்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது ஏறிச் சென்றது. இதில் உடல் சிதறி அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடு, மாடு மேய்க்க வேண்டாம் என அறிவுரை
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே ஊராட்சிக்குட்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மக்கள் நாட்டறம்பள்ளி சாலையை கடந்து செல்லவும் திருப்பத்தூர் சாலையை கடக்கவும் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டுள்ள போது ஒரு சிலர் கேட் திறப்பதற்கு முன்பு தண்டவாளப்பாதையை கடந்து செல்கின்றனர்.

    இதனால் சில சமயங்களில் அவ்வழியாக வரும் ஓடும் ரெயில்களில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

    மேலும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடும் போது தண்டவாள பகுதியில் ஆடு மாடுகள் கடந்து செல்லும் போது ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் இது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையம் சார்பில் அப்பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சோமநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் இங்குள்ள ரெயில் தண்டவாளத்தை ரெயில் யாரும் அஜாக்கிரதையாக கடக்கக் கூடாது. தண்டவாள பாதையில் ஆடு, மாடுகள் போன்றவற்றை மேய்க்க கூடாது. தண்டவாளப் பாதையில் மலம் கழிக்க கூடாது என்றும் விதிமுறைகளை மீறி விரோதமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தண்டவாளத்தை கவனமுடன் கடக்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பது ெரயில்வே போலீசார் மற்றும் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.

    • ஆண்டிபட்டி-உசிலம்பட்டி ரெயில்பாதையில் ஒரு மர்மநபர் தண்டவாளத்தில் கல் வைத்துள்ளார்.
    • உரிய நேரத்தில் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதை ஊழியர் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஆண்டிபட்டி:

    மதுரை-தேனி அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து 11 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தேனி மாவட்டத்திற்கு ரெயில் சேவை தொடங்கியுள்ளது. இதனால் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    குறிப்பாக வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த ரெயில் பயனுள்ளதாக உள்ளது. முதல்கட்டமாக மதுரை-தேனி இடையே சேவை தொடங்கப்பட்டுள்ளது. இப்பாதையை ஆய்வு செய்த ரெயில்வே அதிகாரிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து வருகின்றனர். போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததால் இப்பகுதியில் ரெயில் இயக்குவது சவாலாக உள்ளது என வேதனை தெரிவித்தனர்.

    இதனால் ஊழியர்கள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ஆண்டிபட்டி-உசிலம்பட்டி ரெயில்பாதையில் ஒரு மர்மநபர் தண்டவாளத்தில் கல் வைத்துள்ளார். இதை பார்த்ததும் ரெயில்வே ஊழியர் அவரை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டார். உரிய நேரத்தில் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதை ஊழியர் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    சரவணம்பட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காவலாளி மீது ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தத்தை சேர்ந்தவர் சூர்யநாராயணன (வயது 61). காவலாளி. இன்று காலை இவர் பட்டேல் ரோடு அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சூர்ய நாராயணன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூர்ய நாராயணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் மீது ரெயில் மோதியது. இதில் அடிபட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி செட்டியப்பனூர் அருகே உள்ள ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 46). பெயிண்டர். இவரது மனைவி கவிதா இவர்களுக்கு 3 மகள் 1 மகன் உள்ளனர்.

    சுந்தரேசன் நேற்றிரவு கோதண்டபட்டி ரெயில் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்.

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.          
    அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். #CrackonRailwayTrack
    வேலூர்:

    அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டை பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை விரிசல் ஏற்பட்டது. இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.



    தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், காட்பாடி வழியே செல்லும் யஷ்வந்த்பூர், கவுஹாத்தி, கோவை, பெங்களூரு டபுள் டெக்கர் ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 2 மணிநேரத்திற்கும் மேலாக ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.  #CrackonRailwayTrack
    ×